மக்களின் பிரதானமான பிரச்னை எது?
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? அவர்களின் பிரதான பிரச்னையாக கருதுவது என்ன? போன்றவை குறித்து பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் நமக்கு தகவல்களை கூறுகின்றன. தேர்தலில் மக்களுக்கு முக்கியமான பிரச்னைகள் எவை என்பது குறித்து பிவ் ரிசர்ச் (Pew research) நிறுவனம் நடத்திய ஆய்வில், வேலையவாய்ப்பின்மைதான் நாட்டின் மிகப் பெரிய பிரச்னை என 76 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் 1.86 இந்தியர்கள் வேலையின்றி இருந்ததாகவும், 39.37 கோடி பேர் மோசமான வேலைகளை செய்ததாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக 73 சதவிகித மக்கள் விலைவாசி உயர்வை பெரும் பிரச்னையாக கருதுகின்றனர். வேலைக்காக வெளிநாடு செல்வதும் மக்களின் மனதில் பிரச்னயாக உருவெடுத்துள்ளது பிவ் ரிசர்ச் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரிந்து வரும் தேசியவாத உணர்வு!
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் அதிகரித்திருந்த தேசியவாத உணர்வு, தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக சி-வோட்டர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 29 சதவிகித வாக்காளர்களிடம் இருந்த தேசியவாத உணர்வு தற்போது இது 15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் அன்றாடப் பிரச்னையான வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை, அடிப்படை வசதிகள் ஆகியவை மக்கள் மனதில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது.
73 சதவிகித மக்கள் விலைவாசி உயர்வை பெரும் பிரச்னையாக கருதுகின்றனர் ஏ- சாட்விளைவு?
பாலக்கோட் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் புதிதாக ஏ-சாட் எனப்படும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்ததாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடையே அறிவித்தார். ஆனால் மோடி தேர்தல் நலனுக்காக தேசப் பாதுகாப்புடன் விளையாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது வாக்களாளர்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என விரைவில் தெரியவரும் என சி-வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலிக்குமா மோடியின் ஜம்பம்?
கடந்த சில நாட்களாக தேர்தல் பரப்புரையில் மோடி பாலக்கோட் துல்லிய தாக்குதலைப் பற்றி அதிக அளவில் பேசி வருவதாகவும் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச மறுப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மோடி இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பாலக்கோட் தாக்குதலால் காங்கிரஸ் கவலையடைந்துள்ளதாக அவர் கூறினார். இது தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகின்றன.