மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சத்ருகன் சின்ஹா உள்பட மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 59 தொகுதிகளில் இறுதிகட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
உத்தரப்பிரதேசம்-13, பஞ்சாப்-13, மேற்கு வங்கம்-9, பிகார்-8, மத்தியப் பிரதேசம்-8, ஜார்க்கண்ட்-3, இமாச்சலப்பிரதேசம் 4, சண்டிகர் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது..
தமிழ்நாட்டில், 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.