ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார், பார்மெர், ஜோத்பூர், பிகானேர், ஸ்ரீ கங்கா நகர், ஜெய்ப்பூர், நாகௌர், அஜ்மர் மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பானா மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லலில்பூர் பகுதியிலும் வெட்டுக்கிளிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பேசினார். அதில், ''வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கிய போதும், ராஜஸ்தான் அரசு எவ்வித முதற்கட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகளைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மத்திய அரசு சார்பாக வெட்டுக்கிளிகளைத் தடுக்க 14 கோடி ரூபாய் கொடுத்தும், பாகிஸ்தானில் இருந்து பரவிய வெட்டுக்கிளியைத் தடுக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகளைத் தடுப்பதற்கு தேவையான எந்த இயந்திரங்களையுமோ அல்லது டிராக்டர்களையுமோ மாநில அரசு கொடுக்கவில்லை.