இந்திய விவசாயிகள் வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்கள். தாவரங்களை உணவாக உண்ணும் இவைகளை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் அனைவரின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்படும். இந்த வெட்டுக்கிளிகள் இரவில் ஓய்வெடுக்கும் நேரத்தில், ட்ரோன்கள், டிராக்டர்களில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்துக் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெட்டுக்கிளி எச்சரிக்கை அலுவலகத்தின் துணை இயக்குநர் கே.எல். குர்ஜார் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் விவரித்தார்.
அவருடனான கலந்துரையாடல் வருமாறு:
இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவிற்குள் வந்து இதோடு ஒரு மாதம் ஆகிறது. ஒரு கூட்டத்தில் மொத்தம் 10 முதல் 15 லட்ச வெட்டுக்கிளிகள் இடம்பெறும். இவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தின.
இவைகளை பின்தொடர்ந்து சென்று எங்கு ஓய்வெடுக்கின்றதோ அங்கு அதனைக் கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு இதனை கட்டுப்படுத்தி வருகிறோம். தற்போது பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது குஜராத் மாநிலத்தில் எந்தவொரு வெட்டுக்கிளிகள் கூட்டமும் இல்லை.
இப்போது இவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் , உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நான்கு வாரங்களில் 23 வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்துள்ளன. அதாவது சராசரியாக ஒரு வாரத்திற்கு ஐந்து வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவிற்கு வந்துள்ளன.
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ட்ரோன்கள் பயன்பாடு...
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே செயல்பட்டு வருகின்றன. இதற்காக, வெட்டுக்கிளி எச்சரிக்கை அலுவலகத்தில் (LWO) 200க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதற்காக 47 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண்மை அமைச்சக அலுவலர்கள் தெரிவித்தனர்.
தற்போது ட்ரோன்கள் மூலம் அதனைக் கண்காணித்து, அதன் மூலமாகப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடவுள்ளோம். அவற்றின் சோதனை ஓட்டமும் முடிந்து, தயார் நிலையில் இருக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பூச்சிக்கொல்லி மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காது
வெட்டுக்கிளிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்துகளால் பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது. ஆனால் இதனைப் பயன்படுத்துபவர்கள் முகத்தையும், உடலையும் மறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் வெட்டுக்கிளிகளை எவ்வாறு விரட்ட முடியும்
வெட்டுக்கிளிகள் கூட்டத்தைத் திசை திருப்பவும், அவற்றின் திசையை மாற்றவும் அதிக ஒலி எழுப்புவது எளிதான வழி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். விவசாயிகளும், பொதுமக்களும் தங்களிடம் உள்ள எந்த கருவிகளையும், டிரம்ஸ் போன்ற பாத்திரங்களையும் அடித்து சத்தம் போட வேண்டும். இதனால் இந்தக்கூட்டம் விலகிச் செல்கின்றன.