கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: மக்கள் பல இன்னல்களை கடந்து இந்தியாவை காப்பாற்றியுள்ளனர். நீங்கள் எம்மாதிரியான கடினங்களைக் கடந்து வந்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களின் தியாகத்திற்குத் தலைவணங்குகிறேன். கரோனா வைரஸ் நோய் நம் நாட்டை பாதிப்புக்குள்ளாக்கியதற்கு முன்பே, வெளிநாட்டு பயணிகளை நாம் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கினோம்.
பிரச்னை பெரிதாகும் வரை நாடு காத்திருக்கவில்லை. கரோனா வைரஸ் பரவ தொடங்கியவுடனே அதனைக் கட்டுப்படுத்த முயற்சிகளை எடுத்தோம். சரியான நடவடிக்கைகளை விரைவாக எடுத்திருக்கவில்லை என்றால், அதன் விளைவுகள் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 தாண்டுவதற்கு முன்பே, வெளிநாட்டு பயணிகளை 14 நாள்கள் தனிமைப்படுத்தினோம். அதன் எண்ணிக்கை 550ஆக உயரும்போது, 21 நாள்கள் ஊரடங்கை விதித்தோம். இப்போது, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.