ஐரோப்பியா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நோய் சீனாவில் உருவாகியிருந்தாலும், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் அதன் ருத்ர தாண்டவம் அதிகமாக இருந்தது. தற்போது, இதன் மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 14,378 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 பேர் உயிரிழந்தனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய்யின் தாக்கத்தை பொறுத்து ஏப்ரல் 20க்கு பிறகு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
ஊரடங்கு நிரந்தர தீர்வல்ல என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தற்போதைய சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கே ஆயுதம். ஊரடங்கு நீட்டிப்புக்கு உலக சுகாதார அமைப்பு, மாநில முதலமைச்சர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்படாமல் இருந்திருந்தால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்றது போல், இந்தியாவிலும் அதிக உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கும். சரியான மருந்து கண்டுபிடிக்காத வரை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் ஒரேநாளில் 66 பேருக்கு கரோனா!