கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிப்பின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் தாக்கத்தால் குழந்தைகளின் மன நலன், உடல் நலன், அறிவு நலன் ஆகியவை கடும் பாதிப்பைச் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நாடு முழுவதும் 18 வயதுக்கு குறைவாக உள்ள 44.4 கோடி சிறார்களில் 4 கோடி ஏழை சிறார்களின் வாழக்கை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சுகாதாரப் பேரிடர், குழந்தைகள் நலனில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் எழுந்துள்ளது.
இதில் நகர்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். குறிப்பாக தெருக்கள், சாலையோரம், மேம்பாலங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் சுமார் 70 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் இது போன்ற சூழலில் வசிக்கும் அவலம் உள்ளது.
இது குறித்து யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிதிநிதி யாஸ்மின் அலி ஹக் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், நகர்புற சேரி, பின்தங்கிய கிரமாப்புறம், குடிபெயர்ந்த குடும்பம் ஆகிய பின்னணியில் உள்ள குழந்தைகள்தான் பெரும் பாதிப்புக்குள்ளாகும் ஐயம் உருவாகியுள்ளது.
யுனிசெப் நிறுவனம் மத்திய, மாநில அமைச்சகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளாகும் சூழலில் வசிக்கும் சிறார்களை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்து பாதுகாத்துவருகிறோம்.