இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, "அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பொருளாதார சீரழிவை மட்டும் ஏற்படுத்தவில்லை என்பதை முன்பே ட்வீட் செய்திருந்தேன். இந்த ஊரடங்கு மருத்துவ நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக அந்த ட்வீட் பதிவில், "ஊரடங்கால் ஏற்பட்டுள்ள ஆபத்தான உளவியல் அழுத்தங்களையும், புறக்கணிக்கப்படும் கரோனா பாதிக்காத நோயாளிகளின் நிலை குறித்து விவரிக்கும் கட்டுரையையும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றால் மே 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் எனக் கூற முடியாது என உத்தவ் தாக்ரே பேசியுள்ளதை குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா, "முடிவெடுப்பது கொள்கை வகுப்பாளர்களுக்கு எளிதான காரியம். இல்லையென்றாலும் கரோனா ஊரடங்கை நீட்டிப்பது எவ்விதத்திலும் பயன்தராது.
கரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேதான் இருக்கும். வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை மருத்துவமனையில் ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கவேண்டும். ராணுவத்திற்கு இதில் நிபுணத்துவம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கான விழிப்புணர்வு இ-புத்தகத்தை உருவாக்கிய மருத்துவர்கள்!