நாட்டில் மே 3ஆம் தேதியுடன் நிறைவடைய வேண்டிய முழு அடைப்பு, வெள்ளிக்கிழமை (மே1) மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது வருகிற 17ஆம் தேதி வரை முழு அடைப்பு தொடரும்.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு தினம் கடந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “நாட்டில் என்ன நடக்கிறது. மத்திய அரசின் எதிர்கால திட்டம் என்ன?
நாங்கள் இன்னொரு முழு அடைப்பை பார்ப்போமா? இந்த ஊரடங்கு எப்போது முடிவடையும்? இது பற்றி பிரதமர் தாமாக முன்வந்து 130 கோடி இந்தியர்களிடம் உரையாற்ற வேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னையை மனிதாபிமானத்துடனும், இரக்கமுள்ள முறையிலும் அரசாங்கம் கையாளவில்லை. ஆகவே இந்தத் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவர்களுக்கென்று சுத்தமான ரயில்கள் இலவசமாக இயக்கப்பட வேண்டும். முழு அடைப்புக்கு பின்னர், நாடு எவ்வாறு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நாட்டில் பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு நிதியுதவி வழங்க, “நிதி செயல் திட்டத்தை” அமல்படுத்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டனர்.
அந்த வகையில், அனைவருக்கும் வங்கி திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்கள், பிரதமரின் விவசாய திட்ட பயனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் பொருளாதார சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏழாயிரம் ரூபாய் நேரடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கு 10 கிலோ உணவுத் தானியங்கள், ஒரு கிலோ பருப்பு வகைகள், அரை கிலோ சர்க்கரையும் வழங்க வேண்டும். நெருக்கடி காலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியப்படி, விவசாயப் பயிர்கள் அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதற்கு 24 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு பணம் அளிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ஏழு நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். விவசாயிகள் மகசூலை தொடரும் வகையில் அவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும்.
அதேபோல் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இரண்டு லட்சம் கோடி வரை கடன் தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். அதேநேரத்தில் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சம்பள பிடித்தம் இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கரோனா வைரஸை எதிர்த்து போராடும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், “மத்திய பாஜக அரசு, பிரதமர் அலுவலம் விஸ்தரிப்பு திட்டம், புல்லெட் ரயில் திட்டம் என்று பணத்தை விரயமாக செலவிடுகிறது. இந்த பணத்தை தொகுப்பு நிதியாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்” என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தினார்.