மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது, பொருளாதாரத்தை மீட்க சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த தளர்வுகள் அனைத்தும் டெல்லி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அளவுகளின்படி மாநில அரசுகள் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் எவை என்று முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும்; மண்டலங்கள் மாவட்டங்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அது நகராட்சியாகவோ சிறுபிரிவுகளாகவோ இருக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அரசு அனுமதித்திருக்கும் நேரங்களில் கடைகள் திறக்கப்படுகிறதா?, மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா? என்பதை உள்ளூர் அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லட்சக்கணக்கான டெல்லி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தான் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அமைந்துள்ளன.
தற்போது, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவிக்க வேண்டிய நேரம். நாங்கள் கரோனாவுடன் வாழ கற்றுக்கொண்டோம். பொருளாதார மீட்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் நடைமுறைப்படுத்தும்போது, கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 9,755ஆகவும் உயிரிழப்பு 148ஆகவும் உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், கரோனா ஊரடங்கினால், ஏப்ரல் மாதத்தில் தலைநகர் டெல்லியில் மட்டும் 3,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கு 4.0: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்!