மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் யானை மந்தைகளால் நான்கு மனிதர்கள் மிதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனிதர்களுடன் மோதலில் இரண்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
இது குறித்து அசாம் மாநிலத்தை சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ஆரண்யக்கின் தலைவர் மருத்துவர் பிபாப் தாலுக்தார் கூறுகையில், “கரோனா ஊரடங்கை, அசாமின் பல்வேறு பகுதிகளில் விலங்குகளை கொல்வதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துள்ளனர்.
ஒருபக்கம் வேட்டையாடும் வெறியில் யானைகளுடன் மோதலில் ஈடுபட்ட நான்கு மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், மனிதர்களுடனான மோதலில் இரண்டு யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. மனித உயிர்கள், காட்டுயிர்கள் என இருதரப்பு இழப்பும் கவலைக்குரியது.
வாகனங்கள், ரயில்களின் அசைவு இல்லாததால் இந்த காலகட்டத்தில் காட்டு விலங்குகள் மனித வாழ்விடத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்மூலமாக, இந்த ஊரடங்கு காலகட்டத்தில் காட்டு விலங்குகள் தங்களது 'சுதந்திரத்தை' அனுபவித்து வருவதாகத் தெரிகிறது. இருப்பினும், சில மனிதர்கள் தங்களது பேராசையில் காட்டுயிர்களுக்கு தொல்லைக் கொடுத்து வருகின்றனர். விலங்குகளைக் கொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம்.
நாகாலாந்தில், சில இளைஞர்கள் காட்டுக்குள் சென்று உணவுக்காக விலங்குகளை கொன்றுள்ளனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. அந்த நான்கு இளைஞர்கள் தற்போது நாகாலாந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது " என்றார்.
மேலும், அசாம் மாநிலத்தின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிகையின்படி, “கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் 1,169 யானை-மனித மோதல்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் மட்டும் அசாமில் மனிதர்களுடனான மோதலில் 62 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. அசாமின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 63 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது.
ஊரடங்கில் வேட்டையாடும் பேராசையால் யானை-மனிதர் இடையேயான மோதல் அதிகரிப்பு! இந்தியாவின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவின் காவலர்களின் முயற்சியால் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் வேட்டையாட நடைபெற்ற இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
யானைகளைத் தவிர வேறு பல சிறிய காட்டுயிர் இனங்களும் இந்த காலகட்டத்தில் வேட்டையாடப்படுகின்றன என்பதும் கவலையோடு காண வேண்டிய விஷயமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :காட்டு யானையால் இரவு முழுக்க விழித்திருக்கும் கிராம மக்கள்!