நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில் மேலும் ஒரு இன்னலாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பாலைவன வெட்டுக்கிளிகள் என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் புகுந்து, பருத்திப் பயிர்கள், காய்கறிப் பயிர்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர், ஸ்ரீகங்காநகர் மாவட்டங்களில் முதன் முதலாக வெட்டுக்கிளி தாக்குதல் காண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மே 30ஆம் தேதியன்று ஆல்வார் மாவட்டத்தையும் வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ராஜஸ்தான் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான்வாசிகள் புது யுத்தியைக் கையில் எடுத்து, மேளம் அடித்தும், பலவித ஒலிகளை எழுப்பியும், வெடி வெடித்தும் வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்று வருகிறார்கள். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7), ராஜஸ்தான் வேளாண் துறை அலுவலர்கள் 14,80,858 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை ஆய்வு செய்தனர்.