தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2019, 5:58 PM IST

Updated : Nov 16, 2019, 5:24 PM IST

ETV Bharat / bharat

உள்ளாட்சி உங்களாட்சி 3 - போட்டியிடுவதற்கான தகுதிகள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் குறித்து இப்போது பார்ப்போம்...

Local Body

உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும் கட்சிகள் மட்டுமல்லாமல் சுயேச்சையாகப் போட்டியிடுவோரும் கணிசமான இடங்களைப் பெறுவார்கள். ஏனென்றால், மக்களுடன் களத்தில் போராடுவோர் எளிதில் அதிகம் செலவழிக்காமல், வெற்றிபெற உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே ஒரே வழி.

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவோருக்கு எனக் கண்டிப்பாகத் தேவைப்படும் சில தகுதிகள் உள்ளன. அதாவது ஒருவர் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகிறாரோ, அவரது பெயர் அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளருக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடத்திற்கான போட்டியில், (வகுப்பினர் அல்லது பெண்களுக்கு) அந்த வகுப்பைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் வேட்பாளர் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல்
அதேபோல வேட்பாளராக போட்டியிட விரும்புவோர், கிராம நிர்வாக அலுவலராகவோ, கிராமப் பணியாளராகவோ இருக்கக்கூடாது. மேலும் உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ, அரசு சார்புடைய நிறுவனப் பணியாளராகவோ மத்திய, மாநில அரசு அலுவலராகவோ கண்டிப்பாக இருக்கக்கூடாது.

மேலும், அரசுப் பதவியில் லஞ்சம் வாங்கியிருந்தாலோ, அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதுமட்டுமின்றி 1955ஆம் ஆண்டு குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.

நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தால் அவர் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருடத்துக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. இதுவே தீர்ப்பு சிறைத் தண்டனையாக இருந்தால், சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

வேறு குற்றச் செயலுக்காக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை பெற்று இருந்தால், அவ்வாறு விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு அவர் போட்டியிடத் தகுதியற்றவர்.

மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில் வேறு ஒரு வகுப்பைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அதிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குப் போட்டியிட முடியாது.

உள்ளாட்சித் தேர்தல்

தேர்தலில் போட்டியிட விரும்புபவர் மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது. அதேபோல், அவர் திவால் நோட்டீஸ் அளித்தவராக இருக்கக் கூடாது.

எந்த ஊராட்சியில் போட்டியிட விரும்புகிறாரோ அந்த ஊராட்சியில் ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது. மேலும், தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் தடைசெய்யப்பட்ட நபராக இருக்கக்கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு இல்லாமல், உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி, ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றது தெரிய வந்தால், அந்த நபர் மீது 1994ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டம் பாயும் அபாயமும் உள்ளது.

இதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இந்த விதி பிற்போக்குத்தனமாக உள்ளதாக பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிடும் வகையில் விதி மாற்றப்பட்டுள்ளது.

Last Updated : Nov 16, 2019, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details