கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி என்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு தான் அவ்வாறு பொருள்படும்படி எதையும் கூறவில்லை என்றார். இதன் காரணமாக நானும் எனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்,
ராகுல் விளக்கத்தைத் தொடர்ந்து, தனது கருத்தை திரும்பப் பெற்றார் கபில் சிபல்! - Interim president
![ராகுல் விளக்கத்தைத் தொடர்ந்து, தனது கருத்தை திரும்பப் பெற்றார் கபில் சிபல்! CWC meet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8534699-thumbnail-3x2-df.jpg)
14:06 August 24
'எனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்' - கபில் சிபில்
13:55 August 24
"ராகுல் அவ்வாறு கூறவில்லை" - ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
கபில் சிபலின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "ராகுல் காந்தி இந்த பொருளில் எதையும் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளிக்க வேண்டாம், அப்படியில்லை என்றால் பொய்யான தகவல்கள் பரவும்.
மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், மாறாக நாம் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
13:07 August 24
'பாஜகவுடன் தொடர்பு? பதவி விலக தயார்' - குலம் நபி ஆசாத்
பாஜகவுடன் இணைந்து நாங்கள் செயல்படுகிறோம் என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் குலம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
13:03 August 24
பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா? - ராகுல் கருத்துக்கு கபில் சிபல் பதிலடி
ராகுல் காந்தி கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "ராகுல் காந்தி நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகக கூறுகிறார். ராஜஸ்தான், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றினோம். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் பாஜகவுக்கு ஆதரவாக எந்தவொரு கருத்தையும் நாங்கள் வெளியிடவில்லை. ஆனாலும், நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
12:57 August 24
பாஜக பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் - ராகுல்
இது (கட்சித் தலைமை குறித்து சோனியா காந்திக்கு எழுதப்பட்ட கடிதம்) பாஜகவுடன் இணைந்து செயல்படுவதைப் போல உள்ளது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்
12:42 August 24
பொதுவெளிக்கு எடுத்துச் சென்றது ஏன்? - ராகுல் கேள்வி
கட்சி பிரச்னைகளை பொதுவெளிக்கு தலைவர்கள் எடுத்துச் சென்றது ஏன் என்ரு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, கட்சி பிரச்னைகளை செயற்குழு கூட்டத்தில்தான் விவாதிக்க வேண்டுமே தவிர ஊடகங்களில் அல்ல என்றார்.
12:33 August 24
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கடிதம் ஏன்?
"ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் அரசியல் குழப்பம் எழுந்திருந்தபோது தலைமை குறித்து கடிதம் எழுதாமல், அவர் (சோனியா காந்தி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்த கடிதம் எழுதப்பட்டது ஏன்?" என்று ராகுல் காந்தி செயற்குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
12:28 August 24
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குமாறு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
12:28 August 24
கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குமாறு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
12:23 August 24
அதைத்தொடர்ந்து, கட்சியின் தலைமை குறித்த மூத்த தலைவர்கள் எழுதியிருந்த கடிதத்தை துரதிர்ஷ்டமானது என்று கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டார்.
கட்சி தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும் என்று ஏ.கே. அந்தோனியும் வலியுறுத்தினர்.
12:20 August 24
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியதும், சோனியா காந்தி தனக்கு தலைவர் பதவியில் தொடர்வதில் விருப்பமில்லை என்றார். இருப்பினும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி கட்சித் தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
11:58 August 24
டெல்லி: கட்சி தலைமை குறித்து பெரும் குழப்பம் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தற்போது காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, நீண்ட தாமதத்திற்குப் பின்னர், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரானார்.
இந்தச் சூழலில், 73 வயதாகும் சோனியா காந்தி உடல்நிலை கருதி, தீவிர அரசியலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார். இதன் காரணமாக, நாட்டின் பழம்பெரும் கட்சியைத் தலைமைதாங்கப்போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
கட்சியின் ஒரு தரப்பினர், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இ்ருப்பினும், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரசுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இதே கருத்தில் உடன்படுகிறார்.
அடுத்த ஒர் ஆண்டுக்குள் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு என முக்கிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளதால் வலுவான தலைமை கட்சிக்குத் தேவை என்று மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவராக ராகுல் ஆர்வம் காட்டாததால், கட்சித் தலைவரைத் தேர்வுசெய்ய உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சசிதரூர், மணிஷ் திவாரி உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தற்போது காணொலி வாயிலாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.