திருவனந்தபுரம் (கேரளா): கேரளாவில் மதுக் கடைகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, இணையம் மூலம் மதுபானங்களை பெற்று கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா நோய்க் கிருமி பரவுவதைத் தடுக்க மத்திய அரசு மார்ச் 25ஆம் தேதி முதல் இம்மாதம் 17ஆம் தேதி வரை மொத்தம் 54 நாட்கள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஊரடங்கின் முதல் 40 நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து பிற கடைகள், ஆலைகள், அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த நாட்களில் நாடு முழுவதும் மதுக் கடைகள் திறக்கப்படவில்லை.
இச்சூழலில், மே 4ஆம் தேதி முதல் அத்தியாவசியமில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள் நிறுவனங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. மதுக் கடைகளுக்கும் அனுமதியளித்தது. இதனையடுத்து டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
ஊரடங்கால் பாரம்பரிய முறைக்கு மாறிய ஆழ்கடல் ராசாக்கள் !
ஆனால் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் மதுக் கடைகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுப்பதை தாமதப்படுத்தின. இவ்வேளையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மதுபானக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கேரளாவில் 301 மதுக் கடைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படவுள்ளது.
அதேசமயம் மதுக் கடை திறப்பு தேதியை மாநில அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், ஊரடங்கு சமயத்தில் பிற மாநிலங்களில் மதுக் கடைகளில் கூட்டம் குவிந்தது போல் இங்கு நிகழாமல் இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இணையம் வாயிலாக மதுபான விற்பனைக்கு முன்பதிவு பெற்று, விற்பனை நிலையங்களில் மதுபானங்களை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. உணவகங்கள் உடனுள்ள மதுபானக் கூடங்களில், மதுபானங்களை விற்பனை செய்வதற்காக தனிப் பிரிவுகளை திறக்க கேரள அரசு அனுமதி அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இவ்வளவு செலவழித்த மகாராஷ்டிரா!
கரோனா நோய்க் கிருமிக்கு எதிரான யுத்தத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக மதுபானங்களின் விலையை 10 முதல் 35 விழுக்காடு வரை உயர்த்தவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.