மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் ’ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ என்ற மருந்தை கரோனா வைரஸ் நோய்க்கு இந்திய ஆராய்ச்சி மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து, அம்மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடைவிதித்தது.
இந்த நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஏற்றுமதி தடையை திரும்பப்பெறாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மற்ற நாடுகளுடன் நட்புறவை பேணினாலும் கரோனா தடுப்புக்கான மருந்துகள் இந்தியர்களுக்கு கிடைக்க முதலில் வழிவகை செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நட்புறவு என்பது பதிலடியை கொடுப்பது அல்ல. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவினாலும், கரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு முதலில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
தேவையைப் பொறுத்து தடை திரும்ப பெறப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.