புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இன்று செய்தியாளரை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 2020ஆம் ஆண்டில் புதுச்சேரியில் கொடுக்கப்பட்டுள்ள சவால்கள் என்னவென்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். கிராம ராஜ்ஜியம் அடிப்படையில் ஜனநாயக உரிமை கிராமங்களில் வாழக்கூடிய மக்களுடைய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட வேண்டும். நமது மாநிலத்தில் 2011ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை அதை நடத்துவது நமது அரசாங்கத்தின் முதல் சவால்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வெகுவிரைவிலேயே அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசு சமீபத்தில் புதுச்சேரி அரசுக்கு அளித்துள்ள உத்தரவும். வெளிப்படையான முறையில் மாநிலத்தின் தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
குப்பைகள், கழிவு நீரை மறுசுழற்சி செய்து அவற்றை மீண்டும் உபயோகித்தல். விவசாயத்தில் நீர் சேமிப்பு முறைகளை கொண்டு வருதல், பள்ளிகளில் தாய்மொழி மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைத்தல் மேலும் உயர் கல்வியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புதல் பணிகளில் உள்ள தேக்க நிலையை கலைந்து தேவையான நேரடி நியமனங்கள் செய்தல் மற்றும் பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றின் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.