ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வெங்கடேஷ்புரம் பகுதியில் இருக்கும் எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 12 பேர் உயிரிழந்ததோடு, 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆலையின் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள ஸ்டைரீன் மோனோமர்ஸ், துறைமுகத்தில் உள்ள டாங்குகளில் இருக்கும் ஸ்டைரீன் ஆகியவற்றை தென் கொரியாவுக்கு கொண்டுசெல்லும் வேலை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்.ஜி. பாலிமர்ஸ் நிர்வாகத் தரப்பில் பேசுகையில், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேமிப்பில் உள்ள ஸ்டைரீன் கெமிக்கல் அனைத்தும் தென் கொரியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. சியோலில் உள்ள எங்கள் நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு வந்துள்ளது.
அக்குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் உற்பத்திக் குழு, சுற்றுச்சூழல் குழு, பாதுகாப்புக் குழு ஆகியவற்றுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கவுள்ளனர். இதனோடு பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.