கரோனா சிகிச்சை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் இயங்கி வரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பிற மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சைப் பெறலாம் எனவும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி அரசின் இந்த உத்தரவை டெல்லி துணை நிலை ஆளுநரும் அம்மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவருமான அனில் பைஜால் ரத்து செய்துள்ளார். இது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அலுவலகம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வருகிற ஜூன் மாத இறுதிக்குள் டெல்லியில் 15,000 படுக்கைகளுக்கான தேவை ஏற்படும் என்றும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டால், மாநிலத்தின் அனைத்து படுக்கைகளும் மூன்றே நாட்களுக்குள் ஆக்கிரமிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் டெல்லி அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று தெரிவித்திருந்த நிலையில், அக்குழுவின் அறிக்கையை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கோள் காட்டியிருந்தார்.
தலைநகர் டெல்லியில், கரோனா பெருந்தொற்று காலத்தில், சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த தயார்நிலை ஆகியவை குறித்து வழிகாட்டும் வகையில் இந்தக் குழு டெல்லி அரசால் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :கர்நாடக மாநிலங்களவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனு தாக்கல்!