தங்கள் இளமைக்காலத்தில் சமூகத்தின் வளத்திற்காகவும், உயர் மதிப்பீடுகளைப் பாதுகாப்பதற்காகவும் பாடுபட்டு வாழும் உதாரணங்களாக நம்மிடையே இருப்பவர்கள்தான் இன்றைய முதியவர்கள். தங்கள் குழந்தைகளின் நலன்களுக்காக அன்றைக்கு அனைத்தையும் தியாகம் செய்த அவர்கள் இன்று புறக்கணிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இளமைக் காலத்தில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் இன்று உதவியை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்று தாங்கள் காட்டிய அன்பையும் பரிவையும் இன்று அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய தலைமுறை முதியவர்களை முழுமையாக புறக்கணித்துவிடவில்லை. அவர்கள் அன்பு காட்டுகிறார்கள்; முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள்; தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கிறார்கள் – இவை எல்லாம் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளபோதுதான்.
முதியவர்களின் ஆயுள்காலம் தற்போது அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் முதியவர்களை ஒரு சுமையாக கருதாமல், அவர்களின் தேவையறிந்து உதவக் கூடியவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 41. இது தற்போது 69 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக மருத்துவத் துறையினருக்கும், அந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். அதோடு, சத்தான உணவுகளை உண்பதற்கு ஏற்ப நமது வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. சராசரி ஆயுள்காலம் உயர்ந்திருப்பதற்கு இவையெல்லாம்தான் காரணம்.
இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. உலகின் பல நாடுகளிலும் இத்தகைய முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும், ஜப்பான் இதில் அதிவேகமாக முன்னேறியிருக்கிறது.
சீனாவுக்கு அடுத்ததாக அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், அவர்களின் எதிர்காலம் ஒளிபொருந்தியதாக இருக்கவும் தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டிய மிகப்பெரிய சவால் நம்முன் உள்ளது.
எதனால் இது சவாலாகக் கருதப்படுகிறது?
இந்தியர்களில் 10இல் ஒருவர் முதியவராக இருக்கிறார். வரும் 2050இல் நமது நாட்டில் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய முதியவர்களில் 70 லட்சம் பேர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். 25 லட்சம் பேர் படுக்கையிலேயே வாழ்கிறார்கள்.
விவசாயிகளும் தொழிலாளர்களும் 60 வயதுக்குப் பிறகு நோய்வாய்ப்பட்டவர்களாகிறார்கள். ஏழ்மையான குடும்பங்களில், முதியவர்கள் சுமையாகக் கருதப்படுகிறார்கள். பணிஓய்வுக்குப் பிறகு ஆண்கள் 17 ஆண்டு காலமும், பெண்கள் 21 ஆண்டு காலமுமே வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
முதியவர்களில் பலருக்கு முறையான ஓய்வூதியம் இல்லாததால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு மத்தியில் அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். போதிய வருவாய் இல்லாத நிலையில், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதும் அரிதாகிறது. இதனால் மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
சொந்த ஊரை விட்டுச் செல்பவர்கள் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறார்கள் அல்லது முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுகிறார்கள்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?