காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடியில் சிஆர்பிஎப் வீரர்களும் காஷ்மீர் காவல் துறையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென புதர் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இந்தத் தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்களும், காவலர் ஒருவரும் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை! - காஷ்மீர் தாக்குதல்
காஷ்மீர் : பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமடைந்தது. இறுதியாக கிரீரி பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கியதில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அமைப்பின் தளபதி என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் ஐஜி விஐய் குமார் கூறுகையில், "பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி நசீர்-உ-தி-லோன் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நபர், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி, சோபூரில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், மே மாதம் 4ஆம் தேதி, ஹண்ட்வாராவில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் தொடர்புடையவர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து திருடிச் செல்லப்பட்ட AK-47 ரைஃபிலும் மீட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.