இதுகுறித்து சந்திரசேகர், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த பல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வைரசுக்கு எதிராக செயல்படும் மருந்தை கண்டறிவதுடன், அது நம் உடலுக்குள் நுழைவதை தடுக்கவும் தடுப்பூசி கண்டறியும் பணியில் கவனம் செலுத்திவருகிறோம் என்கிறார்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை இதற்கான பணிகளை மேற்கொள்வதாக இந்திய வேதியியல் நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்ய சபா டிவிக்கு சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.
தலைகீழ் பொறியியல் உத்தி:
கடந்த 4 மாதங்களாக உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றுக்குக் காரணம் கரோனா வைரஸ். இதற்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஆனால், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை, தலைகீழ் பொறியியல் உத்தியை பயன்படுத்தி சில மருந்துகளை கண்டறிந்துள்ளது. கரோனாவுக்கு இந்த உலகில் எங்காவது மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், தலைகீழ் பொறியியல் உத்தியை பயன்படுத்தி குறைவான செலவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை மருந்தை கண்டறியும். இதற்கு காரணம், இந்தியாவில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதி பெற்ற மருத்துவ செடிகள் ஏராளம்.
தேசிய பரிசோதனை நிலையம் சார்ந்த ஆராய்ச்சிக் கூடம் ஒன்று குஜராத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றிவருகிறது. தொழுநோய்க்கு உதவிய எம்டபிள்யூ தடுப்பூசியை இவை அதிகமாக தயாரித்துவருகின்றன. இது கரோனா தொற்றுக்கான சிகிச்சையில் பயனளிக்கும் என நம்புகிறோம் என்கிறார்.
மேலும் அவர், நான்கு மருத்துவமனைகளில் இதற்கான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். ஏபிஐ தொழில்நுட்பத்தின் மூலம் மருந்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியும் நடைபெற்றுவருகிறது. இது நோய்க்கான மருந்தாக இருக்கும். ஆனால் இதை நேரடியாக உட்கொள்ள முடியாது. எனவே பிற வேதிப் பொருட்களை நிறத்துக்கும் சுவைக்கும் பயன்படுத்துகிறோம். மாத்திரை மற்றும் சிரப் வடிவில் இந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
Favipiravir எனும் மருந்து, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை ஆராய்ச்சியாளர்களின் 4 வார கடும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை உள்நாட்டு மருந்து நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளோம். மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.