மும்பை:புகழ்பெற்ற இந்திய செவ்வியல் இசைக்கலைஞரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89.
கடந்த 2019ஆம் ஆண்டு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு, உடலின் இடதுபுறம் செயலிழந்தது. வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்த உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் மார்ச் மாதம் வந்தால் அவர் தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருப்பார்.
மார்ச், 3ஆம் தேதி, 1931ஆம் வருடம், நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகனாக உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் பிறந்தார்.
செவ்வியல் இசையின் அடிப்படை பயிற்சியை தன் தந்தையிடம் பெற்ற கான், பின்னர் அவரது உறவினர் உஸ்தாத் நிசார் ஹுசைன் கானின் கீழ் இசையைக் கற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 1991ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2018ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் பெற்றார். சமகாலத்தில் இயங்கிவரும் இந்திய கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமான சங்க நாடக அகாடமி விருது கானுக்கு 2003ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.