மார்டின் லூதர் கிங், தலாய் லாமா, நெல்சன் மண்டேலா உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு ஆதர்ச நாயகனாக இருந்தவர் காந்தி. அவர்கள் தங்களின் செயல்கள், தத்துவங்களை காந்தியின் சிந்தனைகளிலிருந்து வடிவமைத்துக் கொண்டனர்.
நிறவெறி உச்சத்திலிருந்த தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவருக்கான உரிமைகளை மீட்டெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டிய பெருமை நெல்சன் மண்டேலாவையே சாரும். அவரின் போராட்ட வழிமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அண்ணல் காந்தியடிகளே.
அமெரிக்க காந்தி எனப் போற்றப்படும் அமெரிக்க கறுப்பின உரிமைப் போராளி மார்டின் லூதர் கிங் காந்திய தத்துவங்களால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவரிக்கிறார். 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மார்டின் லூதர் கிங்.
காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தை உணர்ந்துகொள்ள இந்தியா வந்த மார்டின் லூதர் கிங், "மகாத்மாவின் அன்பு நெறிக்கும் மானிட இனத்தின் மீது இயேசு பிரான் கொண்ட கருணைக்கும் உள்ள ஒற்றுமையை கண்டடைந்தேன்" எனக் குறிப்பிடுகிறார். அடக்குமுறைக்குள்ளாகும் மக்களின் தலைசிறந்த ஆயுதம் அகிம்சையே என்றும் தீர்க்கமாக கூறுகிறார் மார்டின் லூதர் கிங்.
காந்தியின் அகிம்சை போராட்ட வடிவமானது உலகமெங்கும் உள்ள சாமானிய மக்களால் எளிதில் கைக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கிழக்கு ஐரோப்பியாவில் கம்யூனிச ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக போலாந்து, செக்கோ ஸ்லோவாகியா போன்ற நாடுகளின் மக்கள் அகிம்சை வழியில் எதிர்த்துப் போராடி வெற்றிகண்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரி பெர்டினாட் மார்கோஸ் மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் தனது பதவியை ராஜினாமா செய்து ஜனநாயக்திற்கு அடிபணிந்தார்.