தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2020, 1:42 PM IST

ETV Bharat / bharat

கண்டறியப்படாத புதிய நோய் குறித்த விசாரணையை தீவிரப்படுத்துங்கள் - இடதுசாரி கட்சிகள்

ஆந்திராவில் பரவியுள்ள மர்ம நோய் குறித்த விசாரணையை தீவிரப்படுத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இடதுசாரி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Left leaders visit Eluru hospital, demand probe into mysterious disease
Left leaders visit Eluru hospital, demand probe into mysterious disease

அமராவதி:ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ளது, எலுரு கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம், தலை வலி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 300க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிய நிலையில், பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமே தற்போதுவரை குறையாமலிருந்து வரும் நிலையில், தற்போது ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் புதிய நோய் குறித்து எவ்வித தகவல்களும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளில் அதிகளவு காரீயம் - நிக்கல் நச்சு கலந்திருப்பதாக எய்ம்ஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் உள்ள காரீயம் - நிக்கல் போன்ற நச்சு எவ்வாறு பாதித்தது என்பது குறித்து அறிய முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும்; மக்கள் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த கண்டறியப்படாத நோயால் பாதிக்கப்பட்டு, எலுரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மக்களை கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினர் பார்வையிடச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் மது, "500க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர அரசு நோய்க்கான காரணத்தை போர்க்கால அடிப்படையில் விசாரிக்க வேண்டும். எலுரு மக்கள் அப்பகுதியில் சுகாதாரப் பிரச்னைகள் குறித்து புகார் எழுப்புகின்றனர். எலுரில் மாசுபாடு எங்கே ஏற்படுகிறது என்ற காரணத்தையும் அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணா, "கரோனா நோய்க்கு மத்தியில் மக்கள் கடந்த மூன்று நாள்களாக ஒரு புதிய நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மருத்துவமனையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். எனவே, நோயால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "முதலமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பிறகும் அங்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது ஒரு நரம்பியல் பிரச்னை என்று பலரும் கூறிவருகின்றனர். எனவே, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்க வேண்டும் " என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஆந்திராவை மிரட்டும் புதிய நோய்;500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - வெங்கையா நாயுடு கவலை

ABOUT THE AUTHOR

...view details