ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச் செயலலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி என கட்சி வேறுபாடுகள் இன்றி டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்தாண்டு, ஜூலை 20ஆம் தேதி, மாரடைப்பு காரணமாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஷீலா தீட்சித் காலமானார். 15 ஆண்டுகளாக தீட்சித் முதலமைச்சராக இருந்தபோதுதான் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டது.
மாசு இல்லாத டெல்லியை கட்டமைக்க அவரின் தொடர் முயற்சிகள் பலனளித்தது, அதன் விளைவாக, 'The Most Competitive City State' என்ற விருது கிடைத்தது என காங்கிரஸ் நினைவுகூர்ந்துள்ளது.
1998 முதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முதலமைச்சராக இருந்த தீட்சித் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரிங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியின் முதலமைச்சராக தீட்சித் இருந்தபோது, வளர்ச்சிக்கான புதிய திசையை உருவாக்கி புதிய அத்தியாயத்தை அவர் படைத்தார். தீவிரமாக இயங்கிய பணிவான தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தீட்சித் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தீட்சித் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு அவரை சந்தித்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி, "அவர் நல்ல உடல்நிலையுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினேன். கையை பிடித்த கொண்ட அந்த தருணம்தான் அவருடனான கடைசி சந்திப்பு என நினைத்துக் கூட பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷீலா தீட்சித் கடந்து வந்த பாதை..!