பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யாததைக் கண்டித்து பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதல். இதற்கு ஆதரவு தெரிவிப்பது நாட்டின் அடிப்படை கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம்" எனப் பதிவிட்டிருந்தார்
தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி, "நேற்று இரவு மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சுதந்திரத்திற்காக தலைவர்கள் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தனர். சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவை அந்தச் சுதந்திரத்தில் பேணப்பட்டது" எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அரசியலைப்புக்கு எதிரான இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. உச்ச நீதிமன்றம் போராட்ட களமாக மாறியுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தங்கள் கடமையை செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்ய தவறிவிட்டனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:காதல் திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த பெற்றோர் - ரயில் நிலைய மின் கம்பியைப் பிடித்து உயிரிழந்த மணமகன்