நக்சல்களின் தலைநகராக இருந்த லதேஹரில் தற்போது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளனர். இருப்பினும், அவர்கள் தற்போது கவலைக்குள்ளாகியுள்ளனர். கரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
ஆனால், போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் தங்களின் கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரபலமான சைனிக் பள்ளி நேதர்ஹாட்டில் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதில்லை.
பல ஆண்டுகளாக, நக்சல்களின் தாக்கத்தால் லதேஹரில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் மேற்கொள்ள முடியவில்லை. ஏழ்மையிலிருந்து தப்பிப்பதற்கு கல்வியே திறவுகோல் என கிராம மக்கள் புரிந்துகொண்டு தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தொடங்கினர். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள 1,234 பள்ளிகளில் 1.49 லட்சம் குழந்தைகள் பயின்றுவருகின்றனர். எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக பயின்றுவரும் குழந்தைகளின் கல்வி கரோனா காரணமாக பெரும் பாதிப்படைந்துள்ளது.
பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடாக மாநில அரசு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தொடங்கியது. ஆனால், பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லாத காரணத்தால், இந்த வசதிகளை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
ஆன்லைன் கல்விக்கு தடையாக இருக்கும் மோசமான இணைய சேவை போதுமான இணைய சேவை இல்லாத காரணத்தால், ஸ்மார்ட்போன்கள் இருந்தும் குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. 27 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கின்றனர் என கல்வித் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
போதுமான வசதிகள் இல்லாததால் குழந்தைகளால் கல்வி கற்க முடியவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு நேரெதிராக, நகர்புற மாணவர்கள் இம்மாதிரியான பிரச்னைகளை சந்திப்பதில்லை. இதற்கு ஒரே தீர்வு வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதாகும். தங்களால் முடிந்த அளவுக்கு இதை செய்வதாகவும், ஆனால் அனைத்து மாணவர்களையும் சந்தித்து கற்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வேறுவிதமான பதில்களை தருகிறது லதேஹர் மாவட்ட பள்ளி கல்வித் துறை. 73 விழுக்காடு மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு இருப்பது உறுதி செய்யப்படும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை.
லதேஹரில் நிலவும் சூழல்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பின்தங்கிய மாவட்டங்களில் நிலவுகிறது. கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளுக்கு இடையேயான பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்வதற்கு கால அவகாசம் தேவை. அரசு இதனை முக்கிய பிரச்னையாக எடுத்தக் கொள்ளாதவரை இதற்கு தீர்வு காண முடியாது.
இதையும் படிங்க: தேர்தல் நடத்துவதில் கோவிட் 19 தாக்கம் என்ன; விளக்குகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்