டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வீதியில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி 2012 டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மக்களிடையே மன்னிப்புக் கேட்டார். நாடெங்கும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து கொடூர பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டது.
இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்றுவந்தபோது 2013ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ராம் சிங் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மைனர் என்பதால், 17 வயது சிறுவன் மூன்று ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து மற்ற நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூக்குத் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில் குற்றவாளிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்படும் சில மணி நேரங்களுக்கு முன்புகூட குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ. பி. சிங் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நடைபெற்ற வழக்கு விசாரணையில், விவாதங்களுக்கு பின், அந்த மனுவையும் டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
வழக்கில் தோற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஏ. பி. சிங், "நிர்பயா அவ்வளவு தாமதமாக இரவில் வெளியே தனது ஆண் நண்பருடன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது குறித்து அவரது தாயிடம்தான் கேட்க வேண்டும்" என்று இந்த சூழலிலும் நிர்பயாவின் நடத்தை குறித்து வெட்கமின்றிக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், குற்றவாளிகளின் இறுதி நிமிடங்கள் குறித்து சிறைத் துறையினர் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். தூக்கிலிடப்படும் தகவல்கள் அடங்கிய கருப்பு நோட்டீஸ், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
தூக்குத் தண்டனை காலை நிறைவேறும் என்ற நிலையில், அந்த கடைசி இரவில், குற்றவாளிகள் அனைவரும் தூங்காமல் நீண்ட நேரம்விழித்துக்கொண்டிருந்தனர். 2015ஆம் ஆண்டுக்குப் பின் ஆசியாவின் மிகப்பெரிய சிறையான திஹார் சிறைச் சாலையில் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை என்பதாலும் சுதந்திர இந்திய வரலாற்றிலேயே நான்கு பேருக்கு ஒரே சமயத்தில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது முதல்முறை என்பதாலும் இரவு சிறைச்சாலை நடவடிக்கைகள் முழுவதும் முடக்கப்பட்டன.