கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடைபெற்றதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது ஏழு விழுக்காடு அதிகமாகும்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். இருப்பினும், ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்வது நம் சமூகத்தில் ஏதோ குறைபாடு உள்ளதையே காட்டுகிறது. நல்ல நிர்வாகம் இல்லாததும் சட்டத்தின் மீது மக்களிடையே அச்சம் இல்லாததுமே இந்த நிலைமைக்கு காரணம் என ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, நீதிபதி வர்மா ஆணையம் கருத்து தெரிவித்தது.
இம்மாதிரியான குற்றங்களை களைய வழிகாட்டுதல்களோ சட்டத் திருத்தங்களோ போதாது. நோயின் மூலத்தை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்த முதல் தகவல் அறிக்கையினை அதிகார வரம்பில்லாத காவல் நிலையங்களிலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய குற்றப்பிரிவு தண்டனைச் சட்டத்தின்படி, 60 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2013 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில், இந்திய குற்றப்பிரிவு தண்டனைச் சட்டம் 154இன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதில், காவல்துறைக்கு வழிகாட்டுதலும் வகுக்கப்பட்டது.