கிழக்கு லடாக் பகுதியில் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் என்று அழைக்கப்படும் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவந்தது.
இந்நிலையில், இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இம்மோதலை அமைதியான முறையில் தீர்க்க சீனா ஒப்புக்கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது.
இந்தியா-சீனா இடையே எல்லைகளில் மோதல் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே சீனாவுடன் இதுபோன்ற மோதலை நாடு சந்தித்துவருகிறது.
அதில் குறிப்பிடத்தக்க மோதல்கள் பற்றியும், அது எதனால் நிகழ்ந்ததென்பது குறித்தும் பார்ப்போம்...
1962 -அக்டோபர் 20ஆம் தேதி இந்தியப் படைகளைச் சீனா தாக்கியது. இதனால் இருநாட்டுக்கும் இடையே போர் வெடித்தது. நவம்பர் 21ஆம் தேதிவரை நீடித்த இந்தப் போரின்போது, 10-20 ஆயிரம் இந்தியப் படையினர், 80 ஆயிரம் சீனப் படையினரை எதிர்கொண்டனர். இறுதியில் சீனாவின் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது.
1967 - இந்தோ-சீனா போர் முடிந்த ஐந்தே ஆண்டுகளில் இருநாட்டுக்கும் இடையே சிக்கிம் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 300-400 சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
1987 - அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள சும்தொரோங் சூ எல்லைப் பகுதியில் எழுந்த மோதலால் இந்தியா-சீனா இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் உருவானது. ஆனால், இந்தியாவின் எச்சரிக்கையான ராஜதந்திர நகர்வுகளால் சீனா பேச்சுவார்த்தைக்குச் செவிமடுத்தது.
இந்த மோதல் இருநாட்டு நல்லுறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1988ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர் எல்லையில் ராணுவ சமநிலையைக் கடைப்பிடிப்பது குறித்து அந்நாட்டு பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.