உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகார்க் மாவட்டம் வழியே செல்லும் முன்சியாரி-புக்தியார்-மிலம் சாலையின் பணிகளை விரைவுபடுத்துவதற்காக எல்லைச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) கனரக உபகரணங்களை கொண்டுவந்து குவித்துள்ளது.
இந்தப் பகுதி இமயமலையின் உயர்மட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சாலை இந்தோ-சீனா எல்லையில் உள்ள கடைசி இணைப்பாகவும் இருக்கும்.
லிபுலேக் பகுதியைச் சாலையுடன் இணைத்தவுடன் மிலாமிலிருந்து சீனாவைப் பிரிக்கும் எல்லைக்கு மலைகளை வெட்டி சாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
இதற்காக, முன்சியாரி பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் சாலை அமைக்கும் கனரகஇயந்திரங்கள் லாஸ்பாவுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.
முன்னதாக லாஸ்பா பகுதியில் பாறைகளை வெட்டும் கருவிகள் இல்லாததால் அதன் கட்டுமானம் தாமதமானது. தற்போது மிலாம் முதல் லாஸ்பா வரை 22 கி.மீ. சாலையில் கடினமான பாறைகளை வெட்டும் பணிகள் நடந்துவருகின்றன.
இதற்கிடையில் இந்தியா- சீனா ராணுவத்துக்கு இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ராணுவப் பேச்சுவார்த்தை எல்லைக் கட்டுப்பாடு பகுதி அருகே இரு படைகளுக்கும் இடையில் நிலவும் மோதல்களைத் தணிப்பதற்கான ஒரு பகுதியாகும்.
கடந்த மாதம் லடாக்கின் பாங்காங் ஏரியில் இரு நாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நள்ளிரவு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட சண்டை வன்முறையாக வெடித்தது.
இந்நிலையில், இந்திய - சீனா எல்லைக்கு அருகே சாலை அமைக்கும் திட்டங்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமைகோரும் காங்கிரஸ்!