கேள்வி: இதற்குமுன் சூமர், டோக்கலாம் ஆகிய பகுதியில் நிலவிய அசாதாரண சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் உள்ள வேறுபாடாக நீங்கள் கருதுவது?
முந்தைய சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் வேறுபாடு உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற டோக்கலாம் விவகாரம் உள் விவகாரமாகவே அரங்கேறியது. டோக்கலாமில் சீனர்கள் சாலை அமைக்க முயன்றபோது இந்தியா பூடான் நாட்டின் எல்லைக்குள் சென்று சாலை அமைக்க வேண்டாம் என அந்நாட்டிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. சூமரிலும் இதேதான் நடந்தது. அவர்கள் சாலை அமைக்க வந்தவுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் வெளியே பரவாமல் உள்விவகாரமாகவே தடுத்துநிறுத்தப்பட்டது. இரு நாடுகளின் தேவையும் அப்போது தெளிவாக வரையறுக்கப்பட்டன.
ஆனால் இம்முறை இது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இம்முறை வரலாற்றிலேயே இல்லாததுபோல் புதிய பகுதிகளில் பூசல் நிலவிவருகிறது. உதாரணமாக கல்வான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் இதுவரை எந்த விவகாரமும் தோன்றியதில்லை. இம்முறை, மிக அதிகமான ராணுவத்தினரைக் குவித்து ஒருங்கிணைந்த முறையில் தனது நகர்வுகளைச் சீனா மேற்கொள்கிறது. இதில் முக்கியக் கேள்வி என்னவென்றால், சீனாவின் தேவை என்ன என்பதாகும். இதுவரை அவர்கள் தங்களின் தேவை என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.
கேள்வி: இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, ஹாங்காங், தைவான் போன்ற விவகாரங்களைக் கொண்டு சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம் தர முயலுகிறதா?
அனைத்து நிகழ்விலும் பூகோள அரசியல் தொடர்பு இருப்பது இயல்பானது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு கடும் அழுத்தம் உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்கா - சீனா இடையே பனிப்போர் நிலவிவருகிறது. இதன் காரணமாக சீனா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தென்சீனக் கடல்பகுதியில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஹாங்காங், தைவான் ஆகிய பகுதிகளிலும் சீனா பல்வேறு அழுத்தத்தை தருகிறது. கரோனா தீநுண்மி காரணமாக நாங்கள் பலவீனமாகிவிட்டோம் எனக் கருத வேண்டம் எனச் சீனா தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பை பொறுத்தவரை அவரது பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இந்த விவகாரம் மூன்றாம் நபரின் தேவையில்லாமல் இரு நாடுகளே பேசித் தீர்த்துக்கொள்ளும்.
கேள்வி: சீனாவின் பி.ஆர்.ஐ. (சர்வதேச நாடுகளை இணைக்கும் மாபெரும் சாலைத்திட்டம்) திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியா - அமெரிக்கா கூட்டணியை சீனா எவ்வாறு பார்க்கும்?
உலக அரசியலைப் பொறுத்தவரை அனைத்து விவகாரங்களும் பங்காற்றும். இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து, சீனாவுக்கு எதிர்த்தரப்பில் நிற்கக் கூடாது என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா பலமான கடற்படையைக் கொண்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் இணையும்பட்சத்தில், தான் பலவீனம் அடையப் போவதாகச் சீனா கருதுகிறது. சீனாவின் 80 விழுக்காடு வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சார்ந்தே உள்ளது. இதுபோன்ற அம்சங்களின் பின்னணியில்தான் சீனா, இருநாட்டு எல்லைப்பகுதியான லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது.