கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், நிகிலின் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.
கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வேளையில், நிகில் திருமணத்தில் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண், ‘நிகில் திருமணம் குறித்து ராம்நகர் இணைக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த திருமணம் விவகாரம் ஊடக வெளிச்சத்தில் இருந்ததன் காரணமாக அறிக்கை கேட்கப்பட்டிருந்தது’ என்றார்.