ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டை உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரியும், குஷ்பூஷனை சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச நீதிமன்றம், ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்தும் தண்டனையைப் பாகிஸ்தான் பரிசீலிக்கவும் உத்தரவிட்டது. மேலும், ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்ட இந்திய அரசின் கோரிக்கையையும் சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனிடையே, ஆகஸ்ட் 2ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியத் தூதர்கள் அனுமதிக்கப்படுவர் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குல்பூஷனை இந்தியத் தூதர்கள் சந்திக்கும்போது பாகிஸ்தான் அலுவலர்களும் உடனிருக்க வேண்டும் என நிபந்தனையைப் பாகிஸ்தான் முன்வைத்ததால் இந்தியா அதனை நிராகாரித்துவிட்டது.