சூரிய மின்சக்தி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுவருகிறது. கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக, பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரத்தை சின்னசாமி மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் வைத்துள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரம் சின்னசாமி மைதானத்தில் பொறுத்தப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், "பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விதமாக ஒரு முயற்சியை தொடங்கியுள்ளோம். பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். முதன்முறையாக, பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரத்தை பொறுத்தியுள்ளோம். இதன்மூலம், 85 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் இதனை செய்துவருகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். இதனை முன்னெடுப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது" என்றார்.