உலகம் வளர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில் மாற்றத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கிறது. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பது இப்போதெல்லாம் மனிதகுலத்தின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. குறிப்பாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால், கள நிலவரமோ வேறொன்றாக இருக்கிறது. கொல்கத்தா முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கள் சூழ்ந்துள்ளது. அதில், பங்கூர் அவென்யூ விதிவிலக்காக உள்ளது. பங்கூர் அவென்யூவில் வசிக்கும் மக்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக அவர்கள் காகித பைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
கடையில் விற்பனை செய்வோரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை. அரசின் சட்ட திட்டத்தை மக்கள் மதிக்கிறார்கள். கொல்கத்தாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பங்கூர் பல்பொருள் அங்காடிக்குச் சென்றால், ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை. தெரு விற்பனையாளர்கள் முதல் இனிப்புக் கடைகள் வரை அனைவரும் காகிதப் பொட்டலங்களையும் பைகளையும் பயன்படுத்துகிறார்கள்
மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவது வழக்கமான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பங்கூர் அவென்யூவில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், தற்போது அங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தாத காரணத்தால் தண்ணீர் தேங்குவதில்லை.