இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது,
"அனைத்து பொதுக்கூட்டங்களுக்கும் தடை, பள்ளிகள், ஜிம்கள், மால்கள், உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், விமானம் மற்றும் மெட்ரோ சேவை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை மே 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், வைரஸ் கட்டுப்படுத்தப்படுவதை பொறுத்து சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களை மறுவரையறு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்குள் பேருந்து போக்குவரத்தை இயக்க மத்திய அரசு அனுமதியளிக்கிறது. அது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது. திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்கும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியே வரக் கூடாது. மாநில அரசுகள் விருப்பினால் சிவப்பு மண்டலங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க அனுமதிக்கலாம். அவ்வாறு அனுமதிக்கும் கடைகளில் ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
மேலும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு பச்சை மண்டலங்களில் மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்". இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.