இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே கடந்த 2017ஆம் ஆண்டு டோக்லாம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவத் தொடங்கியது. குறிப்பாக, இப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த மனநிலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதற்கேற்றவாறு, ரயில்வே அமைச்சகமும் சீன நிறுவனங்களுக்கு விடுத்துள்ள ஒப்பந்தகளை ரத்து செய்துள்ளன. 4ஜி-க்கு தனது சேவையை மேம்படுத்தும்போது சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்திடமும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்திய நுகர்வோர்களை ஏமாற்றும் நோக்கில் சில நடைமுறைகளை சீன நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. அதாவது விவரக் குறிப்பில் (லேபிள்) 'Made in China' என்பதற்கு பதில் 'Made in PRC' என்று அச்சிடப்படுகிறது. PRC என்றால் ’சீன மக்கள் குடியரசு’ என்று பொருள். சீன மக்கள் குடியரசு என்பதே சீனாவின் அதிகாரப்பூர்வ பெயர், இதைப் பயன்படுத்தி சீனா தனது வர்த்தகத்தை என்றும்போல் தொடர்கிறது.
அதேபோல், முன்பு விவரக் குறிப்பில் சீன மொழியைக் கொண்டே தகவல்களை அச்சிடப்பட்டு வந்தது. அதற்கு பதிலாக, தற்போது ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளையும் சீனா பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக இந்திய நுகர்வோர்கள் சீன பொருள்களை தங்களுக்கு தெரியாமலேயே வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? - இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!