புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், "மாநில வளர்ச்சி திட்டங்களை முடக்குவதில் அமைச்சர்கள் அனுப்பிய நூற்றுக்கணக்கான கோப்புகளை ஆளுநர் நிராகரித்து வருகின்றார். மாநில வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றோம் என்றும், ஆனால் கிரண்பேடி தன்னை திருத்திக் கொள்ளாமல் ஆணவப்போக்கிலும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
கிரண்பேடியை எதிர்த்து நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய 36 கோப்புகளில் இப்போது 17 கோப்புகளுக்கு அனுமதி அளித்து இருப்பதாகவும், அதில் ரூபாய் 18 கோடிக்கு ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆதிதிராவிட மக்களுக்கு வீடு கட்டும் மானியம் உள்ளிட்ட 17 கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் புதுச்சேரி மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் துணை ராணுவ படையினரை திரும்பப் பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாடும் இடங்களில் போடப்பட்டுள்ள தடுப்புகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற கெடு விதித்துள்ளதாக தெரிவித்த நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்பிற்காக புதுச்சேரி முழுவதும் இருக்கும் மக்களுக்கு இடையூறாக 144 தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட நிர்வாகம் தரப்பில், இதுகுறித்து விளக்கம் கேட்க உள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்