புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொருளாதார மந்தநிலையால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி குறைந்துள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தால் வருவாய் குறைந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதற்காக மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க வேண்டிய 14 விழுக்காடு இழப்பீட்டுத் தொகையான சுமார் ரூ.380 கோடி இன்னும் வழங்கப்படவில்லை.
கிரண் பேடி ராஜினாமா செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுப்பும் கோப்புகளை மத்திய அரசு நிராகரிப்பதால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வரியை நம்பியுள்ள புதுச்சேரிக்கு, மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிதி கொடுக்காததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சனையை எழுப்பி நிதி அமைச்சரின் ஒத்துழைப்பைக் கேட்கவுள்ளோம்.
தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, பல்வேறு கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், கிரண்பேடியின் உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.