மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர் கரோனா வைரஸுடனான போரில் முன்னின்று போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பின் மூலம் உதவுவதற்காக சிலர் புதுமையான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
ஹைதராபாத்தின் நியோ இன்வென்ட்ரோனிக்ஸ் நிறுவனர் சிரிஷா சக்ரவர்த்தி இந்த முயற்சியில் ஒரு படி மேலே சென்று கரோனா வைரஸை அழிப்பதற்கான ஒரு புதுமையான கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதனை 'வைரஸைக் கொல்லும் விளக்கு' என்று குறிப்பிடுகிறார். இந்த சாதனத்தை நம்மால் ஒளிரச் செய்ய முடியும் என்றும், இதனால் வெளிப்படும் ஒளியானது வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருக்கும் என்றும், இந்த சாதனத்தில் எந்த ரசாயனத்தையும் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.
வைரஸைக் கொல்ல இந்தச் சாதனத்திற்கு கால் மணிநேரம் போதும். இந்தச் சாதனம் 15 நிமிடங்களில் சுமார் 1,000 சதுர அடி பரப்பளவில் அனைத்து வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியாவையும் அழிக்க வல்லது என்று சிரிஷா கூறுகிறார்.
இந்தச் சாதனத்தை வடிவமைப்பது குறித்த யோசனை, தனது நிறுவனத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அவர் கூறும் போது, 'நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவள். நான் இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்து மருத்துவ உற்பத்தித் துறையில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினேன். 'ஸ்டார்ட்அப் இந்தியா - மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்.ஈ.டி பல்புகள் மற்றும் தெரு விளக்குகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான அனுமதி வேண்டி, தெலங்கானா அரசு தொடங்கிய மகளிர் தொழில்முனைவோர் மையத்தில் விண்ணப்பித்திருந்தேன். தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, எங்கள் நிறுவனம் மகளிர் தொழில்முனைவோர் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இருக்கும் சந்தைப் போட்டியில் எங்களுக்கான சந்தையைத் தக்கவைக்க இன்னும் புதுமையான கருவி ஒன்றை தயாரிக்க விரும்பினேன்.
இந்த யோசனை தோன்றியபோது கரோனா வைரஸ் இந்தியாவில் பரவியிருக்கவில்லை. உலகெங்கும் பரவி வருவதாகக் கூறப்படும் பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தோன்றிய சிந்தனை, இந்த புதுமையான முயற்சிக்கு வழிவகுத்தது.
வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்ல பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தைப் பற்றி சிந்தித்தோம். என் கணவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பின்னணியைக் கொண்டவர் என்பதால், நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதித்தோம். மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.