மகாராஷ்டிரா மாநிலம் காண்டேஷ் பகுதியை பாஜகவின் வலுமிக்க கோட்டையாக மாற்றிக் காட்டியவர் ஏக்நாத் காட்சே. மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிரா மாநில அரசின் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் முக்கிய பதவிகளில் பங்காற்றிவந்த அவர் கடந்த சில மாதங்களாக பாஜக மேலிடம் மீது அதிருப்தியில் இருந்துவந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், கடந்த 42 ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகித்துவந்த அவர் நேற்று (அக்டோபர் 22) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். பாஜகவிலிருந்து விலகிய அவர், இன்று சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.சி.பி.யில் இணையவுள்ள அவருக்கு மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைச்சரவையில் ஒரு முக்கியமான பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. வீட்டுவசதி அமைச்சகம் அவர் வசம் ஒப்படைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் காரணமாகவே, மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டம் இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.