கைத்தறி கிராம தொழில்கள் கழகத்தின் புதிய காலணிகள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத்தின் இணையமைச்சர் பிரதாப் சாரங்கி, க்விக் (KVIC) தலைவர் வினய் சக்சேனா ஆகியோர் கலந்துகொண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைத்தறி காலணியை அறிமுகப்படுத்தினர்.
அப்போது அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், '' காலணிகளின் உலகளாவிய சந்தை பங்கு ரூ.1.45 லட்சம் கோடி. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட காதி காலணிகள், கைத்தறி காலணிகளுக்கான புதிய தேவையை உருவாக்கும். காதி காலணியின் இந்த முயற்சியால் வரும் ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிகத்தை உருவாக்க முடியும்.
இதேபோல் பர்ஸ்கள், வாலட்கள், மகளிருக்கான பைகள், மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லும் வகையிலான பெரிய பைகள் ஆகியவற்றை கைத்தறியில் உருவாக்க வேண்டும். அதற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும் தேவை உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு பின் காலணி பயன்பாடு இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது'' என்றார்.