பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடக்கிறது. இத்தேர்தல், கெவதி தொகுதியில் போட்டியிடும் அப்துல் பாரி சித்திகி, பிகாரிகஞ்ச் தொகுதியில் போட்டியிடும் சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ், சஹர்சாவிலிருந்து போட்டியிடும் லவ்லி ஆனந்த், மாதூபுராவிலிருந்து நிகில் மண்டல் மற்றும் அமூரைச் சேர்ந்த அக்தருல் இமான் போன்ற தலைவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும். இது மட்டுமின்றி எட்டு அமைச்சர்களும் தேர்தலை சந்திக்கின்றனர்.
16 மாவட்டங்களில் உள்ள 78 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. முக்கிய வேட்பாளர்களாக ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் சபாநாயகர் விஜய் குமார் சௌத்ரி களம் காண்கிறார். இவர் தவிர ஐக்கிய ஜனதா தளத்தின் அமைச்சர்கள் பிஜேந்திர பிரசாத் யாதவ் (சுபால்), நரேந்திர நாராயண் யாதவ் (ஆலம்நகர்), மகேஸ்வர் ஹசாரி (கல்யாண்பூர்), ரமேஷ் ரிஷிதியோ (சிங்கேஸ்வரர்), குர்ஷித் என்ற பைரோஸ் அகமது (சிக்தா), லக்ஷ்மேஸ்வரர் ராய் (லாஹஹா), பீமா பாரதி (ரூபாலி), மதன் சஹானி (பகதூர்பூர்) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
பாஜக சார்பில் தேர்தலை சந்திக்கும் நான்கு அமைச்சர்கள் பிரமோத் குமார் (மோதிஹரி), சுரேஷ் சர்மா (முசாபர்பூர்), பினோத் நாராயண் ஜா (பெனிபட்டி), கிருஷ்ணகுமார் ரிஷி (பன்மன்கி) தொகுதிகளில் களம் காண்கின்றனர். அண்மையில் காலமான பாஜக அமைச்சர் வினோத் குமார் சிங்கின் மனைவியும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர் கபில் தியோ காமத் தரப்பில் அவரது மருமகளும் களம் காண்கின்றனர்.