டெல்லியில் நடைபெற்றுவரும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்தும், சர்ச்சைக்குரிய மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க கேரள அமைச்சரவையின் கூட்டம் டிச.21 நடந்தது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பில் விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில், முடிவெடுக்கப்பட்டபடி, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தைக் கூட்ட கடந்த 23ஆம் தேதி அம்மாநில அமைச்சரவை, அதற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநர் ஆரிப் முகமது கானை அணுகியது. அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சரவை கூறிய காரணங்கள் தெளிவற்றவை எனக் கூறியதாக கூறப்பட்டது.
ஆளுநரின் இந்த முடிவை கேரளாவை ஆளும் இடதுசாரி முன்னணி கடுமையாக எதிர்த்தது. ஜனநாயக விரோதமான செயல் என விமர்சித்தது. அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளுநர் ஆரிப் முகமது கான் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியது. அத்துடன், ஆளுநரின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரை வலியுறுத்தியது.
இதனிடையே, அமைச்சரவை சார்பில் மாநில வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் மேம்பாடு அமைச்சர் ஏ.கே.பாலன் ஆகியோர் ஆளுநரை நேற்று (டிச.25) நேரில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க டிச.31ஆம் தேதியன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க :மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்கலைக்கழகம்!