கேரளாவைச் சேர்ந்த நசீம், தன்யா தம்பதியினர் தங்களது மகனை அரசு உதவிபெறும் பள்ளியான புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ செயலி சம்பூர்ணாவில், அனைத்துத் தகவல்களையும் பதிவேற்றியுள்ளனர்.
இந்தச் சூழலில், மதம், சாதி ஆகிய பகுதிகளில் தகவல்களைச் சேர்த்தால்தான் பள்ளியில் சேர்க்க அனுமதியளிக்கப்படும் என்று அச்செயலியில் வந்துள்ளது. குழப்பமடைந்த அவர்கள், பள்ளிக்கு நேரில் சென்று, செயலியில் ஏதும் தொழில்நுட்பக் கோளாறா என வினவியுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகத் தரப்பில் செயலியில் அவ்வாறு ஏதும் கோளாறு இல்லை என்றும் கட்டாயம் சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துள்ளனர். தாங்கள் தங்களுடைய குழந்தையின் சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை, அதனால் அவையிரண்டும் இல்லாமல் பள்ளியில் சேர்க்குமாறு கோரியுள்ளனர். அவர்கள் தரப்பு வாதத்தை முற்றிலும் நிராகரித்த நிர்வாகம் அவர்களது மகனைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்துள்ளது.