நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை பொதுத்துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் காரணமாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (Airports authority of india) திருவனந்தபுரம் விமான நிலைய தனியார் நிறுவமான அதானியின் ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் வசம் கைமாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 'திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி) தொடங்கியுள்ளது.
அதானி குழு மேற்கோள் காட்டிய தொகையை செலுத்த கேரள அரசு தயாராக உள்ளது என்று மத்திய அரசுக்கு தெளிவுப்படுத்தியது. இருப்பினும், அந்த கருத்தை மத்திய அரசு ஏற்றதாக தெரியவில்லை. விமான நிலையத்தை அதானி குழுவிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.