கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் நேபாளத்தின் போகாராவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு, ஜனவரி 20ஆம் தேதி இரவு எவரெஸ்ட் பனோரமா என்ற சொகுசு விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.
இதில், பிரவீன் கிருஷ்ணன் நாயர், ரஞ்ஜித் குமார் ஆகியோர் தங்களது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட எட்டு பேர் ஒரே அறையில் தங்கினர். அடுத்த நாள் காலை (செவ்வாய்க்கிழமை) இந்த அறையில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கடுங்குளிர் நிலவும் அப்பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறையை கதகதப்பாக வைத்திருப்பதற்காக கேஸ் ஹீட்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியபோது அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது.