திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜாந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைகொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் கேரள மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கம் துறையும் இணைந்துகொண்டது. இந்த வழக்கில் கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் சுங்க அலுவலர்கள் தொடர்ந்து அக்.9,10 ஆகிய இரண்டு நாள்கள் விசாரணை நடத்தியது.